தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெரன்ஸ். பிரபல ரவுடியான இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சம்பவ தினம் இரவு குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் என்ற டிரைவரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
இதில் படுகாயம் அடைந்த எட்வின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தக்கலை போலீசார் டெரன்ஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
தலைமறைவான டெரன்சை கோழிப்போர் விளை பகுதியில் வைத்து தக்கலை போலீசார் சுற்றி வளைத்து இன்று 6-ம் தேதி காலை கைது செய்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது கீழே தவறி விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் டெரன்சை கைது செய்து, பின்னர் அவரை சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.














