டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சித்தலே, மானுஷ் ஷா ஜோடிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் முதல் 16 வீரர்களில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா மற்றும் சத்தியன் ஞானசேகரன் இடம் பெற்றுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவிலும் தியா சித்தலே விளையாட உள்ளார். இந்த பிரிவில் அவரது ஜோடியாக யஷஸ்வினி கோர்படே களமிறங்குகிறார். இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 27 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். பிரதான சுற்றில் அறுபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.



