T20 WC 2026: ஜார்ஜ் முன்சே, மைக்கேல் லீஸ்க் அசத்தல் – இத்தாலியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!

0
15

ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் உள்ள ஸ்காட்லாந்து, அறி​முக அணி​யான இத்​தாலி​யுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஸ்காட்​லாந்து 4 விக்கெட்கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான ஜார்ஜ் முன்சே 54 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​னார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான மைக்​கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 37 ரன்​கள் சேர்த்​தார். இந்த ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 13.5 ஓவர்களில் 126 ரன்​கள் குவித்​தது. இறு​திக்​கட்ட ஓவர்​களில் அதிரடி​யாக விளை​யாடி பிரண்​டன் மெக்​முல்​லன் 18 பந்துகளில், 4 சிக்​ஸர்​களு​டன் 41 ரன்​களும் மைக்​கேல் லீஸ்க் 5 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 22 ரன்​களும் விளாசினர். முன்​ன​தாக கேப்​டன் ரிச்சி பெரிங்டன் 15 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார்.

208 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இத்​தாலி அணி​யானது ஸ்காட்​லாந்து அணி​யின் இடது கை சுழற்​பந்து வீச்சாளரான மைக்​கேல் லீஸ்கை சமாளிக்க முடி​யாமல் 16.4 ஓவர்​களில் 134 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடக்க வீர​ரான ஜஸ்​டின் மோஸ்கா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் மைக்​கேல் லீஸ்க் வீசிய ஆட்​டத்​தின் முதல் பந்​திலேயே ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து அதிரடி​யாக விளை​யாட முயன்ற ஜேஜே ஸ்மட்ஸ் 11 பந்​துகளில், 2சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிராடு கர்ரி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவரைத் தொடர்ந்து அந்​தோனி மோஸ்கா 13 ரன்​னில் நடையை கட்​டி​னார். 40 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் சகோ​தரர்​களான ஹாரி மனென்​டி, பென் மனென்டி ஜோடி அதிரடி​யாக விளை​யாடியது. இதனால் இத்​தாலி அணி 12 ஓவர்​களில் 113 ரன்கள் குவித்​தது.

சீராக ரன்​கள் சேர்த்த ஹாரி மனென்டி 25 பந்​துகளில், 3 சிக்ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் மைக்​கேல் லீஸ்க் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இந்த ஜோடி 40-வது விக்​கெட்​டுக்கு 73 ரன்கள் சேர்த்​தது. தனது முதல் அரை சதத்தை அடித்த பென் மனென்டி 31 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்டரிகளு​டன் 52 ரன்​கள் எடுத்த நிலை​யில் டேவிட்​சன் பந்​தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்​னர் இத்​தாலி தோல்​வியை நோக்கி பயணித்தது. கிராண்ட் ஸ்டீவர்ட் 2, ஜியான்​-பியரோ மீட் 0, கிரிஷன் கலுமககே 3, தாமஸ் டிராக் 2, அலி ஹசன் 0 ரன்களில் நடையை கட்​டினர். கேப்​டன் வெய்ன் மேட்​சன் தோள்​பட்​டை​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக களமிறங்கவில்​லை. இத்​தாலி அணி தனது கடைசி 7 விக்கெட்​களை 21 ரன்களுக்கு கொத்​தாக தாரை​ வார்த்​தது.

ஸ்காட்​லாந்து அணி தரப்​பில் மைக்​கேல் லீஸ்க் 4 ஓவர்களை வீசி 17 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்கெட்களை கைப்​பற்​றி​னார். மார்க் வாட் 2 விக்கெட்களை வீழ்த்​தி​னார். பிராடு கர்​ரி, பிராடு வில், ஆலிவர் டேவிட்​சன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்​றினர்.

73 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஸ்காட்​காலந்து அணி 2 புள்​ளி​களை பெற்​றது. அந்த அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. ஸ்காட்​லாந்து தனது முதல் ஆட்டத்​தில் 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் மேற்கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி​யிடம்​ தோல்​வி கண்​டிருந்​தது.

‘முதன் முறையாக 200’

இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்காட்லாந்து அணி 200 ரன்களை குவிப்பது இதுவே முதன்முறையாகும். மேலும் ஐசிசி உறுப்புநாடுகளை சேர்ந்த அணி ஒன்று டி20 உலகக் கோப்பை தொடரில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பதும் இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் கனடாவுக்கு எதிராக அமெரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here