ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 183 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.
14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் டிம் ஷெய்பர்ட் 65 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 42 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ஐக்கிய அரபு அமீரக அணியில், கேப்டன் முகமது வசீம், அதிரடி ஆட்டக்காரர் அலிஷான் ஷரஃபு மற்றும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் சித்திக் போன்ற சில அனுபவமிக்க வீரர்கள் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் முகமது வசீம் சர்வதேச டி 20 அரங்கில் 84 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.
விசிலுக்கு அனுமதி இல்லை
டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் மோதின. இந்த போட்டியைகாண வந்த ரசிகர்களை மைதானத்தின் நுழைவு வாயில்களில் சோதனை செய்த காவல் துறையினர் மைதானத்துக்கு உள்ளே விசில்களைகொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இது ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளானது. இது ஒருபுறம் இருக்க மைதானத்துக்குள் விசிலை கொண்டு செல்வதற்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ எந்தவித தடையும் விதிக்கவில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ரசிகர்கள் மைதானத்துக்குள் கொண்டுவரக்கூடாத பொருட்கள் என போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள பட்டிய லில் விசில், கொடி, அரசியல் விளம்பரம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.



