ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.9 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
டெல்லி அணி தனது 4-வது ஆட்டத்தில் இன்று சிஎஸ்கேவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது டி.நடராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டு, எனக்குக் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டது, அது எனக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது.
அந்தத் தருணம் முழுவதும் அணியின் நிர்வாகம், உதவிப் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தனர். நான் எத்தகைய பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதிலும் அவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். டெல்லி, சூரத், ஹைதராபாத் மற்றும் துபாய் என பல இடங்களில் நடந்த பயிற்சி முகாம்களில் நான் கலந்து கொண்டேன்.
இவை அனைத்தும் எனது பந்துவீச்சு லயத்தையும், நம்பிக்கையையும் மீண்டும் பெற உதவின. காயத்திலிருந்து மீண்டு வருவது என்பது மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி, எப்போதும் எளிதானது அல்ல. ஒவ்வொரு முறையும் நான் சிறப்பாகச் செயல்படும் போதெல்லாம், துரதிர்ஷ்டவசமாக ஒரு காயம் குறுக்கே வந்து தடையாக நின்றது.
கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக, எனது உடல் தகுதி மற்றும் பந்துவீச்சுக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளேன். எனது யார்க்கர் பந்துகளை மீண்டும் துல்லியமாக வீசவும், பந்துவீச்சு லயத்தை மீட்கவும் நான் நிறைய பயிற்சி செய்தேன். இப்போது எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பான விஷயங்கள் நிகழ்வதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
டி20 கிரிக்கெட் இப்போது நிறைய மாறிவிட்டது, பேட்டர்கள் இப்போது மிகவும் சாதுர்யமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தங்களை மிகச் சிறப்பாகத் தயார் செய்துகொண்டு திட்டமிடுகிறார்கள். எனவே, என்னை பொறுத்தவரையில் எனத திட்டங்களில் தெளிவு இருப்பதுதான் மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு சூழலிலும் நான் எதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்.
ஒருவேளை பந்துகள் அடிவாங்கினாலும் எனது திட்டத்தில் தெளிவு இருந்தால், என்னால் சிறப்பாக மீண்டு வர முடியும் என்று நம்புகிறேன். சிறுவயதிலிருந்தே நான் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், அது எனக்குப் பெரிதும் உதவியுள்ளது. எனது செயல் திறனை மேம்படுத்த, டென்னிஸ் பந்துகள், எடை அதிகமுள்ள பந்துகள் மற்றும் சிவப்பு நிறப் பந்துகளுடன் பயிற்சி செய்தேன்.
இது குறித்து நான் ஹைதராபாத் அணியில் விளையாடிய போது புவனேஷ்வர் குமாருடன் ஆலோசித்துள்ளேன். பந்தின் நீளத்தைக் கட்டுப்படுத்துவதை மேம்படுத்த, சிவப்பு நிறப் பந்தில் மெதுவாகப் பயிற்சி செய்யுமாறு அவர் எனக்குப் பரிந்துரைத்தார். அது எனது பந்துவீச்சை மேம்படுத்துவதில் பெரும் உதவியாக இருந்தது. முன்பெல்லாம் பந்தின் தையலுக்கு குறுக்காக பிடித்து யார்க்கர்கள் வீசுவேன். தற்போது பந்தின் தையலை இறுகப்பற்றி யார்க்கர் வீசுகிறேன். இதை சாதாரணமாக செய்ய முடியாது. கடின பயிற்சிகளுக்கு பின்னரே வீசமுடிகிறது. இவ்வாறு நடராஜன் கூறினார்.














