ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் அனுமதி உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையதளம் மூலமாக 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் அனுமதிகளுக்காக விண்ணப்பிக்கும் போது, சுவிதா( Suvidha) என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகைய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட சட்டபேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும்.
இது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் தகுதியுள்ள அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்காக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சுவிதா இணையதளம் வழியாக பின்வரும் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துவதற்கான அனுமதி, தற்காலிக கட்சி அலுவலகம் திறப்பு, ஒலிபெருக்கியுடன் கூடிய கூட்டம் நடத்துவதற்கான அனுமதி, ஒலிபெருக்கி இல்லாத கூட்டம் நடத்துவதற்கான அனுமதி, ஒலிபெருக்கியுடன் தெருமுனை கூட்டம் நடத்துவதற்கான அனுமதி, ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதி, பேரணி நடத்துவதற்கான அனுமதி, வீதி உலா (ரோடு ஷோ) நடத்துவதற்கான அனுமதி, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் மற்றும் ஒற்றை தூண் விளம்பரப் பலகை காட்சிப்படுத்துவதற்கான அனுமதி, வாகன அனுமதி, ஒலிபெருக்கியுடன் கூடிய வாகன அனுமதி, மேடை தடுப்புகள் அமைப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
அனுமதி கோரும் அரசியல் கட்சி, வேட்பாளர், நிகழ்வு நடப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்துக்குமுன்னதாக, தேர்தல் செலவினக் கண்காணிப்பு குறித்த சமீபத்திய அறிவுறுத்தல்களின் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள ‘இணைப்பு – டி1’ படிவத்தில், செலவினத் திட்ட விவரங்களுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலுள்ள அனுமதி பிரிவுக்கு பொறுப்பான அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தகுதியுள்ள அதிகாரிகள் குறித்த நேரத்தில் சீராக பரிசீலனை செய்ய ஏதுவாக (முன்மொழியப்பட்ட) செயல்பாடுகளின் தேதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் முழுமையாகவும், சரியாகவும் இருப்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.
சுவிதா இணையதளத்தை suvidha.eci.gov.in என்ற முகவரியில் அணுகலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அரசியல் கட்சிகள் உதவிக்காக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














