இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதில் படத்தின் சர்ச்சைகள் குறித்து அவர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப் பயணத்தையும் ஒரே விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு இந்நிகழ்வு இன்று (டிச.18) மாலை நடைபெறவுள்ளது. இதில் ‘வணங்கான்’ படக்குழுவினருடன் பாலாவுடன் பயணித்த பல்வேறு திரையுலகினரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இந்த விழாவினை ‘வணங்கான்’ படத்தை தயாரித்துள்ள சுரேஷ் காமாட்சி நடத்துகிறார். இந்த விழாவில் சூர்யா மற்றும் விக்ரம் கலந்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் விக்ரம் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால், சூர்யா கலந்து கொள்ளவுள்ளார். ஆகையால் இவ்விழாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
ஏனென்றால், ‘வணங்கான்’ படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் சூர்யா. பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பின்பு சூர்யா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க படத்தை முடித்துள்ளார் இயக்குநர் பாலா. ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ என சூர்யாவுக்கு திரையுலக வாழ்வில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.
’கங்குவா’ தோல்வி, கிண்டல்கள் என பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சூர்யா இந்த விழாவில் கலந்துக் கொள்ள இருக்கிறார். இதனால் இது குறித்து பேசுவாரா அல்லது பாலாவுடனான நட்பு குறித்து மட்டும் பேசிவிட்டு சென்றுவிடுவாரா என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கியுள்ள ‘வணங்கான்’ படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பாடல்களை ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையை சாம் சி.எஸ் ஆகியோர் உருவாக்கி இருக்கிறார்கள். பொங்கல் வெளியீடாக ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது ‘வணங்கான்’.














