லாலு மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
105

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், லாலுவுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் லாலு மீதான வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், ‘‘லாலுவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணையில் இருக்கிறது. அந்த முக்கிய வழக்கில் லாலு தனது வாதத்தை முன் வைக்க வேண்டும். அதற்குள் விசாரணை நீதிமன்ற விசாரணையை நிறுத்தி வைக்க முடியாது’’ என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here