ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை அடித்து கொன்ற வழக்கில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பு கூறும்போது, ” நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோர் செய்த கொடூர குற்றத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் கூறும்போது, ”குற்றம்சாட்டப்பவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஒரு மாத கால இடைவெளிக்குள் அந்த ஜாமீன் உத்தரவுக்கு தடை விதிப்பது முறையாக இருக்காது. இருப்பினும் வழக்கு விசாரணையின் நலனைக் காப்பதற்காக நீதிமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்கும். தற்போதைய சூழலில் 7 பேரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டியதில்லை. இருப்பினும் கர்நாடக அரசின் ஆட்சேபனை குறித்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரும் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.














