நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் பெல்லட் குண்டுகள், கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அத்துமீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணன் மற்றும் ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இதுபோல மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: போராட்டம் நடைபெற்ற இடங்களில் உள்ள அனைத்து சி.சி.டி.வி, ட்ரோன் கேமரா பதிவுகளைத் பாதுகாக்க வேண்டும். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புகைப்படங்கள், தனிநபர் விவரங்களைச் சமூக வலைதளங்கள் அல்லது பொதுவெளியில் வெளியிடக் கூடாது. குற்றப் பின்னணி இல்லாத மாணவர்கள் மீது எவ்விதக் கடுமையான அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது.
பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதிக அளவில் காவல்துறையை பயன்படுத்தியது, மாணவர்கள் மீது தடியடி நடத்தியது உள்ளிட்டவை தொடர்பாக பதிலளிக்க டெல்லி, மகாராஷ்டிரா, பிஹார், கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
