இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க ஆதரவு: அரசியல் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி

0
182

இண்டியா கூட்டணியின் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளிடையே அண்மையில் வலுத்துள்ளது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆதரவளிக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மம்தா பானர்ஜி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்று வழிநடத்த எனக்கு ஆதரவளித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், அவர்களது கட்சிகள் நலமுடன் இருக்கட்டும். அதேபோன்று இந்தியாவும் நன்றாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் பதவி, இண்டியா கூட்டணியின் தலைமை ஆகிய இரண்டு பொறுப்புகளையும் என்னால் திறம்பட நிர்வகிக்க முடியும் என்று கடந்த வாரம் மம்தா கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதற்காக அவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அண்மையில் ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநில கட்சிகள் இண்டியா கூட்டணியின் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்கான மம்தாவின் இந்த நன்றி அறிவிப்பு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here