சீனாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்டிக்குச் செல்வதற்காக சீன தூதரகத்தின் உதவியை இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் நாடியுள்ளார்.
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விசா விண்ணப்பம் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீன தூதரகத்தின் உதவியை சுமித் நாகல் நாடியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சுமித் நாகல் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இருந்தேன். ஆனால், எனது விசா விண்ணப்பம் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் எனக்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சுமித் நாகலின் கோரிக்கைக்கு உடனடியாக சீன தூதரகத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையரில் சுமித் நாகல் 275-வது இடத்தில் உள்ளார். முதல் 100 இடங்களுக்குள் இல்லாததால் சுமித் நாகல், கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் நேரடியாக பங்கேற்க முடியாது. வைல்ட் கார்டு அல்லது தகுதிச் சுற்றுகளின் வாயிலாகவே போட்டிக்குள் நுழைய முடியும்.
இதை கருத்தில் கொண்டே 2026ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றுக்குள் நுழையும் வகையில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்டியில் பங்கேற்க அவர், செங்டுவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த விவகாரம் விரைவாக தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றை சுமித் நாகல் தவறவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது 2026ம் ஆண்டு சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நுழைவதற்கான அவரது வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்.














