ஆஷஸ் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்மித் விலகியது திடீர் திருப்பமாக அமைந்ததோடு, கிரிக்கெட் கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
இன்று டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்மித் ‘தலைசுற்றல்’ காரணமாக விலகியதாக தெரிவித்தது. இன்று காலை வலைப்பயிற்சிக்குப் பிறகே ஸ்மித் கேப்டன் கமின்ஸ் உடனும், கோச் மெக்டொனால்ட் உடனும் பேசினார். பிறகு தனது கிட் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு அவர் மைதானத்தை விட்டே சென்றார்.
திங்கள்கிழமையே ஸ்மித் வலைப்பயிற்சியில் பங்கேற்கவில்லை. இன்று காலை நெட் செஷனில் பங்கேற்றார். ஆனால் அவர் முழு ஃபிட் இல்லை. மேலும் வலையில் ஒரு பந்தில் இடுப்பில் அடி வாங்கி விட்டார் ஸ்மித். இதனால் அவர் கீழேயும் விழுந்ததாகவும் தெரிகிறது.
கடந்த சில தினங்களாகவே வாந்தி மற்றும் தலைசுற்றல் அவருக்கு இருந்ததாகவும், இன்று காலை வரை அவர் விளையாடுவார் என்பது போல்தான் இருந்தார் என்றும், ஆனால் தொடர்ந்து தலைசுற்றல், குமட்டல் நீடித்ததால் அவரால் ஆட முடியாமல் போயுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. பாக்சிங் டே அன்று மெல்போர்ன் டெஸ்ட்டிற்கு ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஸ்மித்தின் இடத்தை உஸ்மான் கவாஜா சரியாகவே பூர்த்தி செய்யுமாறு ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்த போது உஸ்மான் கவாஜா 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் ஒரே ஓவரில் லபுஷேன் (19), மற்றும் 25 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்த கேமரூன் கீரீனை டக்கிலும் வீழ்த்தினார்.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் கமின்ஸ். ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட் சில பவுண்டரிகளுடன் தொடங்கினர், வெதரால்ட் பிரிஸ்க் ஆக ஆடி 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பவுன்சருக்கு விக்கெட் கீப்பரிடம் லெக் திசையில் கேட்ச் ஆகி வெளியேற, மோசமாக வீசிய பிரைடன் கார்ஸ் ஆஃப் வாலி பந்தை ட்ராவிஸ் ஹெட் தரையில் ஆடாமல் சற்றே காற்றில் ஆட அங்கே ஆஃப் திசையில் கிராலி அட்டகாசமான தாழ்வான கேட்சை எடுத்தார்.
இப்போது கவாஜா 42 ரன்களுடனும், கேரி 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஆர்ச்சர் 7 ஓவர் 2 மெய்டன்களுடன் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.







