ஏஐ போன்ற நவீன தொழில் நுட்பங்களை கண்டு அஞ்சாமல் மாணவர்கள் அவற்றை தங்களின் அறிவாற்றலை பெருக்குவதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
குஜராத்தின் தேவமொக்ரா, தமிழகத்தின் கோயம்புத்தூர், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் அசாமின் குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: தலைமைப் பண்பு என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அரசியல் கட்சி தொடங்குவதோ அல்ல; மாறாக, தெளிவான சிந்தனையும், தகவல் தொடர்பும் அத்துடன் முதலில் தன் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையுமே ஒருவரைத் தலைவராக்கும்.
தலைவராக உருவெடுக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். எதையும் முன்னின்று நடத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்காமல், அவற்றை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதே மிகச் சிறந்த தலைமைப் பண்பாக அமையும். தேர்வு பயத்தைப் போக்க மாதிரி வினாத்தாள்களைத் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
அது உங்களை பதற்றமின்றி வைத்திருக்கும். அடுத்ததாக, ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். நல்ல உறக்கம் புதிய சிந்தனைகளையும், தெளிவான முடிவெடுக்கும் திறனையும் வழங்கும். சாதனைகளை விட முதலில் ஒரு காரியத்தைத் தொடங்குவதில் உங்கள் கவனம் இருக்கட்டும். செயற்கை நுண்ணறிவு, செல்போன் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் உங்களை ஆள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
அது உங்களுக்கு வேலை செய்யும் கருவிகளாக மட்டுமே இருக்கட்டும். அவை உங்கள் எஜமானர்களாக மாறிவிட அனுமதிக்காதீர்கள். தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அதைக்கொண்டு நமது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது. வெற்றிக்கு ஒழுக்கம்தான் அஸ்திவாரம். எவ்வளவு தான் உத்வேகம் இருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் எதுவும் பயனளிக்காது.
விளையாட்டையும் கல்வியையும் சமமாகப் பாவியுங்கள். விளிம்பு நிலை மக்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ‘பிஎம்-ஜன்மன்’ போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மாணவர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார்.



