பெரிய அளவில் கனவு கண்டு, விடாமுயற்சியுடன் செயல்பட்டு, ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு, மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.எம். பல்கலை. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் வரலாற்றைப் போற்றும் வகையில், ‘இந்திய குடியரசு – 75 ஆண்டுகள்’ என்ற கருத்தரங்கு, வேந்தர் அருங்காட்சியகம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர் தலைமை தாங்கினார். ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘வேந்தர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
இதில் இந்திய அரசிய லமைப்பின் பரிணாமம், கோட்பாடுகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்த அரிய காட்சிப்பொருட்களும், ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னர் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: இளைஞர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் விலைமதிப்பில்லா சொத்து.
லட்சியத்துடன் ஒழுக்கத்தையும் இணைத்து, பெரிய அளவில் கனவு கண்டு, விடாமுயற்சியுடன் செயல்பட்டு ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் என்றார்.
வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர் பேசும்போது, “ஜனநாயகத்தையும் தேசிய முன்னேற்றத்தையும் நிலைநிறுத்துவதில் வலுவான கல்வி நிறுவனங்களின் முக்கியப் பங்கு உள்ளது. கல்வி என்பது, ஒற்றுமை, தேசிய உணர்வு, பொறுப்புணர்வை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். உயர்கல்வி நிறுவனங்கள், தேசத்தின் மீது அர்ப்பணிப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன” என்றார்.





