போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம்: சிஐடியு மாநில தலைவர் எச்சரிக்கை

0
232

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணியில் இருப்போரின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் சாலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சவுந்தரராஜன் கூறியதாவது: 5 ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளனர். அகவிலைப்படி உயர்வை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை அமல்படுத்த மறுக்கின்றனர். கடந்தாண்டும் இதே நாளில் இதே கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தோம்.

அதில், தலையிட்ட உயர் நீதிமன்றம் பொங்கல் என்பதால் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கோரியது. அதை ஏற்றுக் கொண்டோம். ஆனால், ஓராண்டு கடந்தும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. எனவே, பொங்கலுக்குப் பிறகும் உருப்படியான வேலைகளை செய்யாவிட்டால் வேலைநிறுத்தத்தை தவிர்க்க இயலாது என்றார்.

போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன், சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிகுமார், எம்டிசி சங்கத் தலைவர் துரை, பொதுச் செயலாளர் தயானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here