கொலை செய்யப்பட்ட பிஹார் தம்பதி மற்றும் குழந்தையின் உடல்களை கட்டணமின்றி சொந்த மாநிலத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மூவரின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால், அவர்களின் உடல்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுவதாக தகவல் வெளியானது.
இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்துக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



