கரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறினார்.
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை திடலில் முன்னோட்ட யோகா தின உற்சவம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் யோகா பயிற்சியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யோகா என்பது உடல், மனநலம் காக்கும் பாரம்பரியக் கலையாகும். அதை சர்வதேச அளவில் செயல்படுத்தியவர் பிரதமர் மோடி. நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக யோகா பயிற்சி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசும்போது, “யோக கலை உடற்பயிற்சி மட்டுமல்ல, உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கிறது. யோகா செய்தால் அமைதி, தூய்மை, சக்தி, பலம் ஆகியவை கிடைக்கும். மன அழுத்தத்துக்கான சரியான தீர்வாக யோகா அமைந்துள்ளது. மருந்து இல்லாமல் இயற்கை வழியில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ யோகா உதவும் ” என்றார்.
தொடர்ந்து, காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ், பேரவைத் தலைவர் செல்வம், தலைமைச் செயலர் சரத்சவுகான் உள்ளிட்டோர் யோக பயிற்சி மேற்கொண்டனர். இதில் குழந்தைகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.














