கரூர் நெரிசல் தொடர்பாக பேரவையில் ஸ்டாலின் – இபிஎஸ் கடும் வாக்குவாதம்: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா, முழக்கம்

0
21

சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கொண்டு வந்தனர். அப்போது உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் துயரமான, வேதனையான சம்பவம். ஏற்கெனவே தவெக தலைவர் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியுள்ளார். அங்கு எவ்வளவு மக்கள் பங்கேற்றனர் என்பது அரசுக்கும், காவல் துறைக்கும் தெரியும். அந்த அடிப்படையில் கரூரில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால், இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. கரூரில் நாங்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தைதான் நாட வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் நாங்கள் கேட்ட இடம் கிடைக்காததால், வேலுசாமிபுரத்தை பிரச்சாரத்துக்கு தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்னதாக, வேலுசாமிபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்த நாங்கள் காவல் துறையில் அனுமதி கேட்டபோது, ‘பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான சாலை, குறுகிய சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்தது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி இருக்க, அந்த பகுதியில் தவெக கூட்டம் நடத்த எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? அதனால்தான் இதில் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம் என்பதுபோல, கூட்டணிக்கு ஆள் தேடிட்டு இருக்கீங்க. இதை அரசியல் ஆக்காதீர்கள். இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை என்று பலமுறை சொல்லியுள்ளேன். கவனத்தை ஈர்த்து பேசுவதுதான் முறை. தேவையின்றி, உள்நோக்கத்துடன், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.

பழனிசாமி: நீங்கள்தான் அரசியல் நோக்கத்துடன் பேசுகிறீர்கள். காவல் துறை அனுமதி மறுத்த இடத்தை மீண்டும் ஒருவருக்கு (தவெக) எப்படி கொடுத்தீர்கள்?

பேரவை தலைவர் அப்பாவு: உங்களுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளதே.

பழனிசாமி: கரூர் பேருந்து நிலையம் அருகே ரவுண்டாணா இடத்தில் துணை முதல்வர், கனிமொழி எம்.பி. பேசியுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஸ்டாலினும் பேசியுள்ளார். நாங்கள் அந்த இடத்தை கேட்டோம். அனுமதி வழங்கவில்லை. அதனால், வேறு வழியின்றி, கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் கூட்டம் நடத்தினோம். தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக அன்று இரவே ஏன் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும்? அதற்கு என்ன அவசரம் உள்ளது? ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகும். உடற்கூராய்வு மருத்துவரைதான், அந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்படி எத்தனை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? அங்கு 2 டேபிள்தான் உள்ளதாக சொல்கின்றனர். ஒரே நேரத்தில் எப்படி 39 உடல்களை உடற்கூராய்வு செய்ய முடியும்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து 813 பேர், ஏற்கெனவே கரூர் மருத்துவமனையில் இருந்த 661 பேர் என மொத்தம் 1,474 மருத்துவர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியில் இருந்தனர். கரூர் மருத்துவமனையில் 3 டேபிள்களில் மட்டுமே உடற்கூராய்வு செய்ய முடியும். அங்கு உடற்கூராய்வு மருத்துவர்கள் 2 பேர் இருந்தனர். இரவில் உடற்கூராய்வு செய்ய மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து 22 உடற்கூராய்வு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். மொத்தம் 25 மருத்துவர்கள், உடற்கூராய்வு பணியை 5 டேபிள்களில் செய்தனர். 3-4 மணி நேரத்தில் உடற்கூராய்வு செய்து முடித்ததைப் போன்ற தவறான செய்திகள் பரவுகிறது. உடற்கூராய்வு 14 மணி நேரங்கள் நடந்துள்ளன. இதில் அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 229 பேர் உயிரிழந்தனர். உடல்கள் அனைத்தும் எரிந்து சிதறிய நிலையில் இருந்தது. இந்த 229 உடல்கள் 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு: கரூர் சம்பவம் நடப்பதற்கு 2 நாள் முன்பு, அதே இடத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கூட்டம் நடந்தது. அப்போது எந்த சம்பவமும் நடக்கவில்லை.

பழனிசாமி: உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது. கரூரில் இருந்த ஆம்புலன்ஸ்களில் கரூர் மாவட்ட மருத்துவர் அணி என்று ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், யார் அரசியல் செய்வது என்று தெரிகிறது. தண்ணீர் பாட்டிலிலும் பெயர் உள்ளது. நீங்கள்தான் அரசியல் செய்கிறீர்கள். இரவோடு இரவாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுகிறது. அவர் 6 மணிக்கே தனி விமானத்தில் சென்று விசாரிக்கிறார்.

அமைச்சர் துரைமுருகன்: ஒரு முதல்வர் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, கரூர் சென்றதை பாராட்ட வேண்டாமா.

பழனிசாமி: பாதிக்கப்பட்டவர்களை பார்க்க முதல்வர்தான் செல்ல வேண்டும். அது அவரது கடமை.

முதல்வர்: இரவோடு இரவாக செல்லவில்லை. மறுநாள் மதியம்தான் சென்றேன். முதல்வரின் கடமை என்பதால் சென்றேன். ஆனால், தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அவர் என்ன சொன்னார்?

பழனிசாமி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது, முதல்வர் செல்லவில்லையே.

முதல்வர்: அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்த்துள்ளனர். அது கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள். இங்கு மிதிபட்டு உயிரிழந்தது அப்பாவி மக்கள்.

பழனிசாமி: ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கிய பிறகும்கூட, அரசு செயலர்கள். பொறுப்பு டிஜிபி, கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். அரசியல் எண்ணத்தில் அல்ல. கரோனா காலம், எம்ஜிஆர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அதிகாரிகள் பேட்டி தரவில்லையா.

பழனிசாமி: இது அரசு அதிகாரிகளின் பணி அல்ல. எந்த தகவலாக இருந்தாலும் ஆணையத்திடம்தான் கொடுக்க வேண்டும்.

பேரவை தலைவர்: அப்போது, டெல்லியில் இருந்து எம்.பி.க்கள் குழு வந்ததும் தவறுதானா.

பழனிசாமி: அரசின் அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்னி முறைகேடு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை சிறப்பு விசாரணை குழு அமைத்தும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அமைச்சர் எ.வ.வேலு: தூத்துக்குடி சம்பத்தில் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தீர்கள். அதேபோலதான் முதல்வரும் நியமித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு: கரூரில் உயிரிழப்பு நிகழ்ந்த பிறகு, அக்கட்சியின் தலைவர் உட்பட யாரும் அங்கு வரவில்லை. எல்லாம் பேசும் நீங்கள், அதை மட்டும் ஏன் சொல்லவில்லை.

அமைச்சர் சிவசங்கர்: கரூரில் சம்பவம் நடந்த பிறகு இரவில் எங்கும் கடைகள் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. அதனால், திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்த தண்ணீர் பாட்டில்களை உறுப்பினர் செந்தில் பாலாஜி எடுத்து வந்து கொடுக்க சொன்னார். உணவு கொடுக்க சொன்னார். இதைக்கூட அரசியலாக பேசுவதா. ‘ஒரு இடத்துக்கு காவல் துறை அனுமதி கொடுப்பதற்கு முதல்வரே பொறுப்பு. முதல்வர் அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்கிறார். தூத்துக்குடியில் வாகனத்தின் மீது உட்கார்ந்து நெஞ்சில் சுட்டார்களே, அதற்கு முதல்வராக இருந்த அவருக்கு பொறுப்பு இல்லையா?

(அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைத் தலைவர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.)

முதல்வர்: ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு ஏன் அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர் என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். தூத்துக்குடி சம்பவம் குறித்து இதே அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தபிறகு, அன்றைய முதல்வரே பேட்டி கொடுத்துள்ளார். எப்படியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். வெளிநடப்பு செய்ய வேண்டும். வெளியேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள் பேசிய பேச்சை வைத்து தெரிகிறது. அவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி போர்க்குரல் வந்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த குரல் வந்ததுக்கு காரணமே, கூட்டணி இன்னும் சரியாக அமையவில்லை. கூட்டணி அமைப்பதற்கான முயற்சிதான் இது. என்னதான் கூட்டணி அமைத்தாலும், அது அமையப்போவது இல்லை. அப்படியே அமைந்தாலும் மக்கள் சரியான பாடத்தை வழங்குவார்கள் என்பது தான் உண்மை. இவ்வாறு பேரவையில் வாதம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here