ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு

0
263

பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ‘ப்ளூ’ வைரஸ்களால் பரவும், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப, சிறப்பு வார்டுகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், ‘டெங்கு, இன்ப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 24 மணி நேரமும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here