நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை விருதை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி. தனது தேசிய அணி மற்றும் கிளப் அணியில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
2023-24 பிரீமியர் லீக் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி பட்டம் வெல்லவும், யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் அவரது ஆட்டம் உறுதுணையாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் Ballon d’Or விருதை பெற்றுக் கொண்டார்.
28 வயதான அவர், மான்செஸ்டர் சிட்டி சார்பில் சிறப்புமிக்க இந்த விருதை பெறுகின்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ நீங்கலாக இந்த விருதை வென்ற மூன்றாவது வீரர் ஆகியுள்ளார் ரோட்ரி. கடந்த 2018-ல் லூகா மோட்ரிச் இந்த விருதை வென்றிருந்தார். அதன் பின்னர் இந்த விருதை வெல்லும் மிட்-ஃபில்டராக ரோட்ரி அறியப்படுகிறார்.
மகளிர் பிரிவில் ‘Ballon d’Or 2024’ விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயினின் யமால் வென்றார்.
Ballon d’Or: பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். அதிகபட்சமாக மெஸ்ஸி இந்த விருதை 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ 18 முறை இந்த விருதை வெல்வதற்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ளார். அவர் 5 முறை இந்த விருதை வென்றுள்ளார்.