சரக்குகள் கையாளுவதை அதிகரிக்க, ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம் ஆகிய 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, சரக்கு ரயிலில் நவீன வசதிகளை ஏற்படுத்துவது, சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டத்தில் 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயண கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் வருவாயை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு, வருவாயை அதிகரிப்பது, விரைவு ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் செய்வது, ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கி சரக்குகளை கையாளுவதை அதிகரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை ரயில்வே கோட்டத்தில், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ரயில்வே யார்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம் ஆகிய ரயில் நிலையங்களின் ரயில்வே யார்டுகளில் மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஷெட்டுகளை மேம்படுத்துவது, மேற்கூரை அமைப்பது, இடவசதி விரிவாக்கம், சரக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கான நிறுத்த வசதி, சரக்கு கையாளுவதற்கான நவீன கருவிகள் அமைப்பது, தேவைப்பட்டால் கூடுதல் நடைமேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.