தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஓய்வுபெற்றார்: புதிய தலைவராக பி.அமுதா நியமனம்

0
181

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதள சேவையை தமிழில் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பிறந்த எஸ்.பாலசந்திரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று, பி.எச்.டியும் முடித்தார். தொடக்கத்தில் மத்திய நீர்வள ஆதாரத்துறையில் ஆராய்ச்சி உதவியாளராக பணியை தொடங்கியவர், பின்னர் மத்திய போட்டித் தேர்வில் வெற்றிபெற்று, புனே வானிலை ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்.

இத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். 2018-ம் ஆண்டு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் என்ற உயர் பதவியையும் அடைந்தார். 6 ஆண்டுகளுக்கு மேல் இப்பதவியில் பணியாற்றிய இவர், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

இவர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்தபோது, வானிலை நிலவரங்களை, அதன் இணையதளத்தில் தமிழில் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தினார். அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் வெளியிடுதல், சமூகவலை தளங்களில் வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தமிழில் வெளியிடுதல் போன்ற சேவைகளையும் அறிமுகப்படுத்தினார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வானிலை தரவுகளை பெறுவது மற்றும் வானிலை கணிப்பை மேம்படுத்த ஏராளமான கருவிகளை நிறுவினார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, வானிலையை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது இஸ்ரோவுடன் இணைந்து, உள்ளூர் தொழில்நுட்பத்தில் உதிரி பாகங்களை உருவாக்கி செயல்பட வைத்தார்.

மேலும் எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரையும் பள்ளிக்கரணையில் நிறுவ நடவடிக்கை எடுத்தார். இவரது நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது மேம்பட்டது. இந்நிலையில் அவர் நேற்றுடன் பணி ஓய்வுபெற்றார்.

வானிலை ஆய்வு மையத்தின் புதிய தென் மண்டல தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1991-ம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு பி.எச்டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here