லாகூர்: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களும், செனுரன் முத்துசாமி 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 84 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து நோமன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
செனுரன் முத்துசாமி 11, பிரேனலன் சுப்ராயன் 4, காகிசோ ரபாடா 0 ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 109 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 167 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக பாபர் அஸம் 42, அப்துல்லா ஷபிக் 41, சவுத் ஷகீல் 38 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 5, சைமன் ஹார்மர் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 277 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது. எய்டன் மார்க்ரம் 3, வியான் முல்டர் 0 ரன்களில் நோமன் அலி பந்தில் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 29, டோனி டி ஸோர்ஸி 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 226 ரன்கள் தேவை என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. லாகூர் மைதானத்தில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு 208 ரன்கள்தான். கடந்த 1961-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை படைக்கும்.