கடன் தொகைக்கும் கூடுதலான சொத்துகளை விற்றுவிட்டனர்: மல்லையா மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு

0
161

தான் பெற்ற கடன் தொகைக்கும் கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டதாகவும் அது தொடர்பான விவரங்களை வழங்கக் கோரியும் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்குமாறு வங்கிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.

மல்லையாவு இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அவர் பெற்ற கடனுக்கு ஈடாக அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏலத்தில் விற்றது. இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று ரூ.14 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர் சஜன் பூவையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “வங்கிகளில் நான் பெற்ற கடனை வசூலிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, ரூ.6,200 கோடியை செலுத்த வேண்டும் என எனக்கு உத்தரவாதம் அளித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை செலுத்தாததால், அமலாக்கத் துறை அந்த நிறுவன சொத்துகளை விற்று கடனை திருப்பிச் செலுத்தி உள்ளது. ஆனால், ரூ.6,200 கோடி கடனுக்கு சொத்துகளை விற்று ரூ.14 ஆயிரம் கோடி மீட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறி உள்ளார். அதேநேரம், ரூ.10,200 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடன் வசூல் அதிகாரி கூறியுள்ளார். எனவே, நான் பெற்ற கடனை திரும்பப் பெற்ற கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஆர்.தேவதாஸ், விஜய் மல்லையா மனு குறித்து வரும் 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நேற்று உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here