கொங்கு மண்டலத்தின் பெரிய கவுண்டரான பழனிசாமியையும் சின்னக் கவுண்டரான அண்ணாமலையையும் வைத்து அமித் ஷா ஆடத் தொடங்கி இருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது!
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்ற ஒற்றைத் தீர்மானத்தை கையில் எடுத்திருக்கும் பாஜக தலைமை அதற்கான பொறுப்பை வழக்கம் போல அமித் ஷாவிடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, வழக்குகள் மூலம் திமுக வட்டத்தை கலங்கடிக்கத் தயாராகி வரும் அமித் ஷா, அதற்கு முன்னதாக திமுக-வை வீழ்த்துவதற்கான பாஜக அணியை வலுப்படுத்தும் வேலைகளையும் வேகப்படுத்தி இருக்கிறார்.
இதன் முதல்கட்டமாக, வருமானவரித் துறை சோதனை, இரட்டை இலை விவகாரம், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களை முன் நிறுத்தி அமித் ஷா கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அதிரடியாக ‘சம்மன்’ அனுப்பினார். உடனே டெல்லிக்குப் புறப்பட்டார் பழனிசாமி. அமித் ஷா உடனான சந்திப்பில் கூட்டணிக்கு உடன்படுவதாக ஒத்துக்கொண்ட பழனிசாமி, இப்போதைக்கு இதை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி, ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோரை கட்சிக்குள் சேர்க்கும் படி நிர்பந்திக்கக் கூடாது, பாஜக-வுக்கான பங்கீட்டில் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பது உள்ளிட்ட தன் தரப்பு நிபந்தனைகளையும் அமித் ஷாவுக்கு பழனிசாமி கோரிக்கையாக வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சந்திப்பு முடிந்த அடி மறைவதற்குள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். டெல்லியில், அதிமுக-வுடன் இணக்கமாகச் செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்களை அடுக்கிய அண்ணாமலை, தமிழக பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான பி.எல்.சந்தோஷ் நியமித்த சர்வே டீம் எடுத்த சர்வே ரிப்போர்ட் படி அதிமுக-வின் வாக்கு வங்கி சரிந்துள்ள விஷயத்தையும் அமித் ஷாவுக்கு தெளிவுபடுத்தியதாகச் சொல்கிறார்கள்.
இறுதியாக, பழனிசாமி தமிழகம் தழுவிய தலைவராக இல்லாததால் அவரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது எதிர்பார்த்த பலனைத் தராது என்ற தனது கருத்தையும் அவர் தைரியமாக எடுத்துச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தனைக்கும் பிறகும் அதிமுக கூட்டணி குறித்து அமித் ஷா தரப்பில் அண்ணாமலைக்கு சில அட்வைஸ்கள் தரப்பட்டதாம்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலை, “கூட்டணி விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை… தொண்டனாக இருக்கவும் தயாராக இருப்பதாக டெல்லியில் கூறி இருக்கிறேன்” என்றெல்லாம் பேட்டியளித்தார்.
அதிமுக கூட்டணி சரிப்பட்டு வராது என அண்ணாமலை அமித் ஷாவுக்கு தெளிவுபடுத்திவிட்டார். இதையும் மீறி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாஜக தலைமை முடிவெடுத்தால் மாநில தலைவராக அண்ணாமலை நீடிக்க முடியாது. இதைத்தான் அண்ணாமலை பூடகமாக பேட்டியில் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஒருவேளை, அண்ணாமலையின் கருத்தை ஏற்றுக்கொண்டால், செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டவர்களை வைத்து பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு மற்றவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை கட்டமைக்கும் பி பிளானையும் டெல்லி கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, அண்ணாமலை மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிக்க தமிழக பாஜக-வில் பலரும் பலவித கணக்குகளுடன் காத்திருக்கிறார்கள். அதில் முதல் நபராக, அதிமுக-விலிருந்து வந்த நயினார் நாகேந்திரன் அதையே தனக்கான ப்ளஸ் பாயின்டாக வைத்து காய் நகர்த்துகிறார்.
அண்ணாமலை நீக்கத்தால் கொங்கு மண்டலத்தில் ஏற்படும் சரிவை தங்களால் ஈடுகட்ட முடியும் என வானதி சீனிவாசன் தரப்பும் மோதுகிறது. நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிமுக-வுக்கு வாக்கு வங்கி சரிந்திருப்பதால் அதை தங்களால் பாஜக பக்கம் திருப்ப முடியும் என பொன்னாரும் தமிழிசையும் நம்பிக்கை கொடுக்கிறார்களாம்.
அதேசமயம், தமிழகத்தில் பாஜக-வுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த அண்ணாமலையை சூழ்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து மாற்றினாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது தேசிய அளவிலான பொறுப்பைத் தர வேண்டும் என்பதிலும் பாஜக தலைமையும் அமித் ஷாவும் தெளிவாக இருக்கிறார்களாம். ஆக, அமித் ஷா ஆடும் இந்த அரசியல் சதுரங்கத்தில் சாயப் போவது பெரிய கவுண்டர் பழனிசாமியா சின்னக் கவுண்டர் அண்ணாமலையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!