இந்தியாவுக்கு எதி​ரான ஆட்டம்​ புறக்​கணிப்​பு: பாகிஸ்தான்​ வாரியத்துக்​கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்​து என்​ன?

0
26

ஐசிசி டி 20 உலகக்​ கோப்​பை கிரிக்​கெட்​ தொடர்​ வரும்​ 7-ம்​ தேதி இந்​தி​யா மற்​றும்​ இலங்​கை​யில்​ தொடங்குகிறது. இதில்​ நடப்​பு சாம்​பிய​னான இந்​தி​யா உள்​ளிட்​ட 20 அணி​கள்​ கலந்​து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில்​ ‘ஏ’ பிரி​வில்​ போட்டியை நடத்​தும்​ இந்​தி​யா, பாகிஸ்​தான்​, நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்​கா ஆகிய அணி​கள்​ இடம்​ பெற்றுள்ளன.

கோடிக்​கணக்​கான ரசிகர்​களால்​ மிக​வும்​ எதிர்​பார்க்​கப்​படும்​ இந்​தி​யா – பாகிஸ்​தான்​ அணி​கள்​ மோதும்​ லீக்​ ஆட்​டம்​ வரும்​ 15-ம்​ தேதி கொழும்​பு நகரில்​ உள்​ள ஆர்​.பிரேம தா​சா மைதானத்​தில்​ நடை​பெறும்​ வகை​யில்​ அட்​ட​வணை வெளி​யாகி இருந்​தது. இந்​நிலை​யில்​ இந்​த போட்​டியை மட்டும் புறக்​கணிப்​ப​தாக பாகிஸ்​தான்​ அரசு நேற்​று முன்தினம்​ இரவு அறி​வித்​தது.

இதுதொடர்​பாக பாகிஸ்​தான்​ அரசு வெளி​யிட்​டு இருந்​த எக்ஸ் வலைதள ​ பதி​வில்​, “இஸ்​லாமிய குடியர​சான பாகிஸ்​தான்​ 2026 ஐசிசி டி 20 உலகக்​ கோப்​பை தொடரில்​ பங்​கேற்​க பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ அணிக்​கு ஒப்​புதல்​ அளிக்​கிறது. இருப்​பினும்​, பிப்​ர​வரி 15-ம்​ தேதி இந்​தி​யா​வுக்​கு எதி​ராக விளை​யாட திட்​ட​மிடப்​பட்​டுள்​ள போட்​டி​யில்​ பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ அணி களமிறங்​காது” என தெரிவிக்​கப்​பட்​டு இருந்​தது.

பாகிஸ்​தான்​ அரசின்​ இந்​த முடி​வானது வங்​கதேச கிரிக்​கெட்​ வாரி​யம்​ டி 20 உலகக்​ கோப்​பை தொடரில்​ நீக்​கப்​பட்​டதற்​கு ஆதர​வாக​வும்​ அரசி​யல்​ நோக்​கத்​தில்​ எடுக்​கப்​பட்​ட​தாக​வும்​ பல்​வேறு தரப்​பினர்​ கருத்​து தெரி​வித்​துள்​ளனர்​. வங்​கதேச அணி பாது​காப்​பு காரணங்​களை கரு​தி இந்​தி​யா வந்​து விளை​யாட மாட்​டோம்​, தங்​கள்​ அணி பங்​கேற்​கும்​ ஆட்​டங்​களை இலங்​கைக்​கு மாற்​ற வேண்​டும்​ என ஐசிசி-க்​கு கோரிக்​கை வைத்​திருந்​தது. ஆனால்​ ஐசிசி இதை ஏற்​க​வில்​லை. இதையடுத்​து வங்​கதேசத்​துக்​கு மாற்றாக ஸ்காட்​லாந்​து அணி சேர்க்​கப்​பட்​டது.

இந்​த நடவடிக்​கை பாகிஸ்​தானின்​ கிரிக்​கெட்​ மற்​றும்​ அரசி​யல்​ வட்​டாரங்​களில்​ கடுமை​யான எதிர்​வினை​களைத்​ தூண்​டியது. அதே நேரத்​தில்​, பாகிஸ்​தானின்​ முன்னாள்​ வீரர்​கள் பலரும்,​ அதி​காரி​களும்​ நாட்​டின்​ கிரிக்​கெட்​டைப்​ பா​திக்​கும்​ எந்​தவொரு முடிவை​யும்​ எடுக்​க வேண்டாம்​ என்​று அறி​வுறுத்​தினர்​.

ஆனால்​ தற்​போது அந்​நாட்​டு அரசு, இந்​தி​யா​வுக்​கு எதிரான போட்​டியை புறக்​கணிப்​ப​தாக அறி​வித்​துள்​ளது. இந்​த முடிவை கேள்விக்​குள்​ளாக்​கி உள்​ள ஐசிசி, டி 20 உலகக்​ கோப்​பை தொடரில்​ இந்​தி​ய அணிக்​கு எதி​ரான ஆட்​டத்​தை புறக்​கணிப்​பு செய்​வது கடுமை​யான தடைகளுக்​கு வழி​வகுக்​கும்​ என்​று எச்​சரிக்​கை விடுத்துள்ளது.

இதுதொடர்​பாக ஐசிசி வெளி​யிட்​டுள்​ள அறிக்​கை​யில்​, “பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யம்​ தனது சொந்​த நாட்​டில்​ கிரிக்​கெட்​டுக்​கு ஏற்​படக்​கூடிய குறிப்​பிடத்​தக்​க மற்​றும்​ நீண்​ட​கால விளைவு​களைக்​ கருத்​தில்​ கொள்​ளும்​ என்​று ஐசிசி நம்​பு​கிறது. ஏனெனில்​ இந்​த முடிவு, பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யம்​ உறுப்​பின​ராக​வும்​ பயனாளி​யாக​வும்​ இருக்​கும்​ உலகளா​விய கிரிக்​கெட்​ சூழல்​ அமைப்​பைப்​ பா​திக்​கக்​கூடும்​.

தேசி​யக்​ கொள்​கை விஷ​யங்​களில்​ அரசாங்​கங்​களின்​ பங்​களிப்​பை ஐசிசி மதித்​தா​லும்​, இந்​த முடிவு உலகளா​விய கிரிக்​கெட்​ விளை​யாட்​டுக்​கோ அல்​லது பாகிஸ்​தானில்​ உள்​ள லட்​சக்​கணக்​கானோர்​ உட்​பட உலகெங்​கிலும்​ உள்ள ரசிகர்​களின்​ நலனுக்​கோ உகந்​ததல்​ல.

திட்​ட​மிடப்​பட்​ட போட்​டியைத்​ தவிர்க்​கு​மாறு தேசி​ய அணிக்​கு உத்​தர​விடு​வது சர்​வ​தேச விளை​யாட்​டின்​ அடிப்படைக்​ கட்​டமைப்​புக்​கு முரணானது. ஐசிசி போட்டிகள்​ நியா​யம்​, நேர்​மை மற்​றும்​ போட்​டி சமநிலை ஆகிய கொள்​கை​களின்​ அடிப்​படை​யில்​ அமைந்​தவை. ஒரு அணி​யுட​னான போட்​டி​யில்​ மட்​டும்​ விளை​யாட மாட்டேன்​ என்​பது அந்​தக் கொள்​கைகளை பலவீனப்படுத்தி, தொடரின்​ நம்​பகத்​தன்​மை​யை சேதப்​படுத்​தும்​.

பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யத்​திடம்​ இருந்​து முறையான தகவலுக்​காக இன்​னும்​ காத்​திருக்​கிறோம்​. நீண்​ட கால விளைவு​களை கவன​மாக மதிப்​பிட்​டு பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யம்​ முடிவு​களை எடுக்​க வேண்​டும்​. டி20 உலகக்​ கோப்​பை 2026 தொடரை வெற்​றிகர​மாக நடத்து​வ​தே ஐசிசி​-யின்​ முதன்​மை நோக்​கம்​.

இது பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யம்​ உட்​பட அனைத்​து உறுப்​பு வாரி​யங்​களின்​ கூட்​டுப்​ பொறுப்​பாக​வும்​ இருக்​க வேண்​டும்​. அனைத்​து பங்​கு​தா​ரர்​களின்​ நலன்​களை​யும்​ பாது​காக்​கும்​ ஒரு பரஸ்​பரம்​ ஏற்​றுக்​கொள்​ளக்​கூடிய தீர்வை பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​வாரி​யம்​ ஆராய வேண்டும்​ என எதிர்​பார்க்​கிறோம்​” எனத்​ தெரி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தான் அணி

தனது மற்​ற லீக்​ ஆட்​டங்களில்​ பிப்​ர​வரி 7-ம்​ தேதி நெதர்​லாந்​துட​னும்​, 10-ம்​ தேதி அமெரிக்கா​வுட​னும்​, 18-ம் தேதி நமீபி​யா​வுட​னும்​ மோது கிறது. இந்​த 3 ஆட்டங்​களும்​ இலங்​கை​யின் கொழும்​பு நகரில் உள்ள​ எஸ் எஸ்​சி மைதானத்தில்​ நடை​பெறுகிறது.

ரூ.2,200 கோடி இழப்பு

ஐசிசி தொடர்​களில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் போட்டி சுமார் ரூ.2,200 கோடிக்​கும் மேல் வரு​வாயை ஈட்​டிக்​கொடுக்​கும் என சில மதிப்​பீடு​களின் வாயி​லாக தெரிய​வந்​துள்​ளது. இதன் காரண​மாகவே அனைத்து ஐசிசி தொடர்​களி​லும் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​களை ஒரே பிரி​வில் இணைத்து போட்டி அட்​ட​வணை வெளி​யிடப்​படு​கிறது.

அதிக வரு​வாய் ஈட்​டித் தரும் இந்​தப் போட்டி வரவிருக்​கும் டி20 உலகக் கோப்​பை​யில் இல்​லாதது, ஒட்டுமொத்த போட்டியுடன் தொடர்​புடைய அனைத்​துத் தரப்​பினருக்​கும் பெரும் இழப்​பு​களை ஏற்​படுத்​தும் என்​பது உறு​தி​யாகி உள்​ளது.

இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்தை புறக்​கணிக்​கும் முடிவில் பாகிஸ்​தான் அணி உறு​தி​யாக இருந்​தால், அந்நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் கோடிக்​கணக்​கான வருவாயை இழக்​கும் அபா​யத்தை எதிர்​கொள்​ளும். தற்​போது அந்த வாரி​யத்​தின் ஆண்டு வரு​மானம் சுமார் ரூ.350 கோடி​யாக உள்​ளது. பாகிஸ்​தானின் விடாப்​பிடி​யான இந்த முடிவு ஐசிசி-​யின் நிதி​நிலைக்கு கணிச​மான இழப்பை ஏற்படுத்​தும்.

மேலும் ஐசிசி-​யுடன் 3 பில்​லியன் டாலர் ஒப்​பந்​தத்தை மறு​பேச்​சு​வார்த்தை வாயி​லாக நடத்த முயற்​சிக்​கும் இந்​திய ஊடக உரிமை​யாள​ரான ஜியோஸ்​டாருக்​கும் இது பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும். இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதும் போட்​டி​யின் போது 10 வினாடி விளம்​பரத்​துக்கு ரூ.40 லட்​சம் வரை கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. இந்த வகை​யில் மட்​டும் போட்​டியை ஒளிபரப்பு செய்​யும் நிறுவனம் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி ரூபாய் வரை விளம்பர வரு​வாய் இழப்​பு​களைச்​ சந்​திக்​க நேரிடலாம்​.

இலங்கை புறப்பட்டது பாகிஸ்தான்

ஐசிசி டி 20 உலகக் கோப்​பை​யில் இந்​திய அணிக்கு எதிராக பிப்​ர​வரி 15-ம் தேதி நடை​பெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்​தான் அணி பங்​கேற்​காது என அந்நாட்டு அரசு அறி​வித்​துள்​ளது. எனினும் இதுதொடர்பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​திடம் இருந்து ஐசிசி-க்கு முறைப்​படி இன்​னும் அறிவிக்கப்படவில்​லை.

இந்​நிலை​யில் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்​காக சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி நேற்று லாகூரில் இருந்து இலங்கை புறப்​பட்​டுச் சென்​றது. பாகிஸ்​தான் வீரர்​கள் டி 20 உலகக் கோப்பை தொடருக்​கான புதிய சீருடை​யுடன் ஓட்​டல் அறை​யில் இருந்து புறப்​படும் வீடியோவை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் எக்ஸ் வலைதளத்தில்​ வெளியிட்டுள்ளது.

இந்​தி​யா​வுக்​கு எதி​ரான போட்​டியை பாகிஸ்​தான்​ அணி புறக்​கணித்​தால்​ அந்​த ஆட்​டத்​தில்​ இந்​தி​ய அணிக்​கு முழு​மை​யாக 2 புள்​ளி​கள்​ வழங்​கப்​படும்​. இந்​த விவ​காரத்​தில்​ பாகிஸ்​தான்​ அணி மீது நிதி ஆதா​ரங்​கள்​ தொடர்​பான தடைகளை வி​திக்​கும்​ அதி​காரம்​ ஐசிசி-​யிடம்​ உள்​ளது.

பாகிஸ்​தான்​ போட்​டியை புறக்​கணிப்​ப​தாக கூறியிருந்தாலும்​ போட்​டி நடத்​த திட்​ட​மிடப்​பட்​டுள்​ள நாளில்​ இந்​தி​ய அணி​யின்​ கேப்​டன்​ டாஸ்​ போடு​வதற்​கு களத்​துக்​குச்​ செல்​ல வேண்​டும்​. இதற்​காக இந்​தி​ய அணி, இலங்​கைக்​கு பயணிக்​கும்​. அங்​கு டாஸ்​ நிகழ்​வில்​ சூர்யகுமார்​ யாதவ்​ பங்​கேற்​பார்​. பாகிஸ்​தான்​ அணி​யின்​ கேப்​டன்​ சல்​மான்​ அலி ஆகா டாஸ்​ நிகழ்​வுக்​கு வரவில்​லை என்​றால்​ அந்​த அணி வெளி​யேறிய​தாக முடிவு செய்​து, நடுவர்கள்​ இந்​தி​யா​வுக்​கு 2 புள்​ளி​களை முழு​மை​யாக வழங்​கு​வார்​.

எது​வும்​ செய்​ய முடி​யாது

பாகிஸ்​தான்​ அணி​யின்​ கேப்​டன்​ சல்​மான்​ அலி ஆகா கூறும்​போது, “டி 20 உலகக்​ கோப்​பை​யில்​ பங்​கேற்​க நாங்கள்​ இலங்​கை செல்​கிறோம்​. இந்​தி​யா​வுக்​கு எதி​ராக விளை​யாட வேண்​டாம்​ என்​ற முடிவு எங்​களு​டையது அல்ல. எங்​களால்​ இதில்​ எது​வும்​ செய்​ய முடி​யாது. எங்​கள்​ அரசாங்​கம்​ அல்​லது பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரிய தலைவர்​ எங்​களை என்​ன செய்​யச்​ சொல்​கிறார்​களோ, அதை மட்​டுமே நாங்​கள்​ செய்​வோம்​” என்​றார்​.

என்​ன தண்​டனை?

டி20 உலகக்​ கோப்​பை​யில்​ இந்​தி​ய அணிக்​கு எதி​ரான போட்​டியை புறக்​கணிப்​ப​தாக பாகிஸ்​தான்​ தெரி​வித்​துள்​ளது. இதனால்​ அந்​த அணிக்​கு ஐசிசி கடுமை​யான தண்டனை​களை வழங்​கக்​கூடும்​ என கருதப்​படு​கிறது.

உலக டெஸ்ட்​ சாம்​பியன்​ஷிப்​ புள்​ளி​களைக்​ குறைப்​பது, ஐசிசி தரவரிசை​யில்​ முன்னேற்றம் இல்லாமல் செய்வது, முன்​னணி நாடு​கள்​ பாகிஸ்​தானுக்​குப்​ பயணம்​ செய்​ய வேண்டாம் என அறிவுறுத்துவது, பாகிஸ்​தான்​ சூப்​பர்​ லீக்​கில்​ (பிஎஸ்​எல்​) வெளி​நாட்​டு வீரர்​கள்​ பங்​கேற்​ப​தற்​கான​ தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதை நிறுத்துவது உள்​ளிட்​ட தடைகளும்​ பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யத்​துக்​கு வி​திக்​கப்​படலாம்​.

நாக்​ அவுட்​ சுற்​று?

டி20 உலகக்​ கோப்​பை தொடரில்​ இந்​தி​ய அணிக்​கு எதி​ராக 15-ம்​ தேதி நடை​பெறும்​ லீக்​ ஆட்​டத்​தில்​ பாகிஸ்​தான்​ அணி விளை​யா​டாது என அந்​​நாட்​டு அரசு தெரி​வித்​துள்​ளது. இருப்​பினும்​, உலகக்​ கோப்​பை தொடரின்​ ​நாக்​-அவுட்​ சுற்றுகளில்​ ​பாகிஸ்​​தான்​ – இந்​தி​யா அணி​கள்​ மோத நேர்ந்தால்​ என்ன நடக்​கும்​ என்​பது குறித்​து ​பாகிஸ்​​தான்​ கிரிக்கெட்​ ​வாரியமோ அல்லது அந்நாட்டு அரசோ இதுவரை தெளிவுபடுத்​தவில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here