மாலா மணியனின் ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கோவையைச் சேர்ந்த அக் ஷிதா நாயகியாக நடித்துள்ளார்.
நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம், மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8-ம் தேதி மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் மாலை 6 மணிக்குச் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து மாலா மணியன் கூறும்போது, “எந்த காலத்துக்கும் ஏற்ற கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பயணம், இசை மற்றும் உறவுகளை மையப்படுத்தி ஃபீல் குட் படமாக உருவாகி இருக்கிறது.
க்ரவுட் ஃபண்டிங் போல ‘பிரண்ட்ஸ் ஃபண்டிங்’ என்று சொல்லும் விதமாக இந்த படத்தை நண்பர்கள் உதவியுடன் தயாரித்துள்ளேன். பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப் படத்தின் சிறப்புக் காட்சியில் இயக்குநர் குட்டி ரேவதி, நாயகி அக் ஷிதா, நான் கலந்து கொள்கிறோம்” என்றார்.














