ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டுநர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு முன்னுரிமை அடிப்படையில், காஸ் சிலிண்டர் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழங்கப்பட்டாலும், வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ரயில் ஓட்டுநர்களின் ஓய்வறைகளில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வெளியூ்ர்களுக்கு ரயில்களை இயக்கும் ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் பணி முடிந்து ஓய்வெடுக்க வசதியாக, நாடு முழுவதும் 558 ரயில் ஓட்டுநர் ஓய்வறைகள் உள்ளன.
தெற்கு ரயில்வேயில், சென்னை எழும்பூர், சென்ட்ரல், சென்னை கடற்கரை, தாம்பரம், திருவொற்றியூர், ஈரோடு, திருச்சி, விழுப்புரம், மதுரை, காட்பாடி, சேலம், கோவை உள்பட பல்வேறு இடங்களில் ஓட்டுநர் ஓய்வறைகள் உள்ளன.
உயர் தரத்தில் பராமரிக்கப்படும் இந்த அறைகளில் அவர்களுக்கு மானிய விலையில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது. தற்போது, ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஏ.எம். பேபி ஷக்கிலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ரயில்வே கோட்டங்களில் உள்ள பல்வேறு ஓய்வறைகளில் (Running Rooms) ஓட்டுநர் மற்றும் இயக்கப் பணியாளர்களுக்கு உணவு கிடைக்காத காரணத்தினால், தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ரயில் ஓட்டுநர்கள் தங்கள் பணி மற்றும் ஓய்வு நேரங்களில் குறித்த நேரத்துக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதற்கு ஓய்வு அறையையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றனர். தற்போதைய சூழல் பணியாளர்களுக்குப் பெருத்த சிரமத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், நீண்ட மற்றும் களைப்பூட்டும் பணி நேரங்களுக்குப் பிறகு அவர்களால் முறையான உணவைப் பெற இயலவில்லை. இது அவர்களின் உடல்நலன், பணிச் செயல்பாட்டை பாதிக்கும் எனவே, ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையான உணவு தயாரித்து வழங்குவதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஓய்வுபெற்ற ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், ‘‘ரயில் ஓட்டுநர்கள் ஓய்வறைகள் ஏ,பி,சி என்றும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்” என்றார்.














