ராஜேஷ் எம். இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். அனுயா, ஊர்வசி, சந்தானம் நடித்த இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜேஷ் – ஜீவா கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இதை மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரிக்கிறார். இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.











