பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
அடுத்த மாதம் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த தொடர் முதல் அஃப்ரிடி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானை அஃப்ரிடி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 131 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.