‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு – பின்னணி என்ன?

0
13

புதுடெல்லி: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து பேசும் ‘ஹக்’ படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஷா பானுவின் மகளான பானு பேகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 1980-களில் நாட்டின் முஸ்லிம்களை உலுக்கியது ஷா பானுவின் விவாகரத்து வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசுக்குப் பெரும் சவாலாகவும் இருந்தது. இந்த வழக்கில் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு பராமரிப்பு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்துக்கு எதிரானது என அப்போது நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹக்’ (Haq) எனும் பெயரில் ஓர் இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இதன் வெளியீட்டை நிறுத்துமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வை பானு பேகம் நாடியுள்ளார்.

இந்த வழக்கு இந்தூர் அமர்வின் நீதிபதி பிரனய் வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மனுதாரர் பானு பேகம் தரப்பு, மறைந்த தனது தாயாரின் வாழ்க்கையை சித்தரிக்கும்போது திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் ஒப்புதலைப் பெறவில்லை என்று கூறியது. மேலும், இந்தப் படம் தனிப்பட்ட நிகழ்வுகளை சித்தரிப்பதால், ஷா பானுவின் வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

அதேவேளையில், இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஜங்லீ பிலிம்ஸ் நிறுவனத்தினரோ, இந்தத் திரைப்படத்தின் கதை கற்பனையானது எனத் தெரிவித்தனர். எனவே, படத்தைத் தயாரிக்க ஷா பானுவின் வாரிசுகளிடமிருந்து எந்த ஒப்புதலையும் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டிருந்தனர். இம்ரான் ஹாஷ்மி, யாமி கௌதம் நடித்த இந்த திரைப்படம் நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here