ரூ.100 கோடி கேட்டு கார்கே, ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர் வழக்கு

0
263

வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக பொதுமக்களுக்கு வினோத் தாவ்டே பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. பல்கார் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு வினோத் தாவ்டே பணம் வழங்கியதாக பகுஜன் விகாஸ் அகாதி தலைவர் ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியிருந்தார். வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பாஜக தேசிய பொதுச் செயலரான வினோத் தாவ்டே, நேற்று கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக வினோத் தாவ்டே கூறியிருப்பதாவது:

வாக்காளர்களுக்கு நான் பணம் விநியோகம் செய்ததாக காங்கிரஸ் பொய்யான புகாரைக் கூறியுள்ளது. நான் யாருக்கும் பணம் வழங்கவில்லை. இதற்காக கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லாவிட்டால் ரூ.100 கோடி கேட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும்.

என் மீது அவதூறு புகார் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் மீது கிரிமினல், சிவில் வழக்குகள் தொடரப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here