மேற்கு வங்கத்தில் 40 ரஃபேல் விமானங்கள் உள்ளன; இரண்டை அனுப்பினாலே போதும் என்று வங்கதேசத்துக்கு மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா-வங்கதேச எல்லை அருகே உள்ள பசிர்ஹத் நகரின் ஹஜ்ரதலா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி கலந்துகொண்டு பேசியதாவது: வங்கதேசம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், இந்துக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால் வங்கதேசத்தை எப்படி சமாளிப்பது என்று இந்தியாவுக்குத் தெரியும். பெரும்பாலான தேவைகளுக்கு இந்தியாவை நம்பி உள்ள வங்கதேசத்துக்கான ஏற்றுமதியை காலவரையின்றி தடை செய்யவேண்டியிருக்கும்.
நாம் மின்சாரத்தை நிறுத்தினால் வங்கதேச நாடே இருளில் மூழ்கிவிடும். இந்திய ராணுவத்தின் ரஃபேல் 40 போர் விமானங்கள் ஹசிமாரா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டை அனுப்பினாலே போதுமானது.
நமது பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்டால். ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்தார். வங்கதேசம் நமது பொறுமையை சோதிக்கக் கூடாது. 1971-ல் அந்த நாடு சுதந்திரம் பெறுவதற்காக நாம் 17,000 ராணுவ வீரர்களை தியாகம் செய்தோம். தேவைப்பட்டால் மீண்டும் அதேபோன்ற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்.














