தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக – அதிமுக நிர்வாகிகள் இடையே நடந்த நிகழ்வு அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சட்டப்பேரவையில் நடைபெற்றுவரும் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே எம்எல்ஏக்கள் அவைக்கு வருகை தந்தனர். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபுவும், அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாக நடந்து வந்தனர்.
யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டே வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திடீரென தனது போனை சேகர்பாபுவிடம் நீட்டினார். சேகர்பாபுவும் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் பேசியபடியே உள்ளே சென்றார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழக அரசியலிலும், சட்டப்பேரவைக்குள்ளும் தீவிர அரசியல் எதிரிகளாக மோதிக்கொள்ளும் பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், வெளியே காட்டிய இந்த இணக்கமான சூழல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
போனில் சேகர்பாபு யாருடன் பேசியிருப்பார், அது அதிமுக மேலிடத் தலைவரா அல்லது துறைசார்ந்த விவகாரமா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு யூகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.
