வேளாண்மையை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் விதை சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விதை சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றை மாற்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விற்கப்படும் அனைத்து விதைகளின் தரம், உற்பத்தி, விற்பனையை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில், விதை சட்ட வரைவு-2025 என்ற புதிய வரைவை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது கண்டனத்துக்குரியது.
இதன்மூலம் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, சோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே சந்தையில் விற்பனை செய்யமுடியும். வேளாண் மக்கள், தங்களது தற்சார்பு வாழ்வியல் உரிமையை இழந்து, விதைகளுக்காக கையேந்தி நிற்க வைக்கப்படுவர்.
தனியார் நிறுவனங்கள் தருவதுதான் விதை, அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையை உருவாக்குவது, பெரும் பஞ்சம் ஏற்பட வழிவகுத்து நாட்டை பேரழிவை நோக்கி அழைத்துச்செல்லும்.
விதை உரிமையை மொத்தமாக தனியாருக்குத் தாரை வார்த்து, நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் உணவுக்கு கையேந்த வைக்கும் கொடுமையும் அரங்கேறுவதற்கான தொடக்கமே இப்புதிய சட்ட வரைவு.
எனவே, வேளாண்மையை தனியார் நிறுவனத் தொழிலாக்கும் விதை சட்ட வரைவு 2025-ஐ மத்திய பாஜக அரசு எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக் கூடாது. அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.







