திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிக்கரையில் மண் கடத்தல்: சீமான் குற்றச்சாட்டு

0
164

திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணல், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்துக்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது.

அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்து திருத்தணி பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மணல் அள்ள தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அதன் பிறகும் பட்டாபிராமபுரம் ஏரிப்பகுதியில் தொடர்ச்சியாக மணற்கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழக அரசால் இதை தடுக்க முடியவில்லை. இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

கேரளாவில் மணல் கொள்ளையே இல்லை என சொல்லும் அளவுக்கு அங்குள்ள ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் ஆறுகள் மட்டுமின்றி ஏரிக்கரை பகுதிகளில் இருந்தும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. எனவே திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் கட்டுங்கடங்காது நடைபெறும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here