முன்னாள் ரவுடியான ராஜாவின் (பரத்) காதல் மனைவி சிறுநீரக பிரச்சினை காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற ரூ.15 லட்சம் தேவைப்படுகிறது. தூய்மை பணியாளரான சாவித்திரி (அபிராமி) திருநங்கையாகிவிட்ட தனது மகனின் மருத்துவப் படிப்புக்கு வாங்கிய கடனுக்காகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். திருமணமாகி கணவன் வீட்டுக்கு வரும் அஞ்சலி நாயருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சாதி வெறியரான நாதன் (தலைவாசல் விஜய்), தன் மகள் அனிதா (பவித்ரா) வேறு சாதியை சேர்ந்தவரைத் திருமணம் செய்வதை அறிந்து தடுக்க நினைக்கிறார். இவர்களின் சிக்கல்கள் எப்படித் தீர்க்கின்றன, இவர்களை இணைக்கும் விஷயம் என்ன? என்பதுதான் இந்த ‘ஹைபர்லிங்க்’ படத்தின் கதை.
4 மனிதர்கள் வெவ்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன நடக்கும் என்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு, அதை இறுதியில் இணைத்த விதத்தில் கவர்கிறார், இயக்குநர் பிரசாத் முருகன். இது, அது என அங்கும் இங்குமாக மாறி மாறி நகரும் கதை இனிய திரையனுபவத்தைத் தருகிறது.
சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ததும் அவர்களின் நடிப்பும் கதையின் நம்பகத் தன்மையை அதிகப்படுத்துகின்றன. திருநங்கைகளுக்கு நடத்தப்படும் கொடுமைகள், ஆணவக் கொலை, சாதிவெறி உள்ளிட்ட பலவிஷயங்கள் படத்தில் பேசப்பட்டதைப் பாராட்டலாம் என்றாலும் எதையும் அழுத்தமாகச் சொல்லாத திரைக்கதை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ராஜா கதாபாத்திரத்தை ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் செழுமைப்படுத்தி இருக்கிறார், பரத். ‘தலைவாசல்’ விஜய், அபிராமி ஆகியோர் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்கள். அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, திருநங்கையாக நடித்திருப்பவர், கல்கி ராஜன், ரவுடி கூட்டத்தில் தனித்துத் தெரியும் ஜெகன் கவிராஜ், ஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கே.எஸ். காளிதாஸ் மற்றும் கண்ணா. ஆர் ஒளிப்பதிவும் ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது. ஷான் லோகேஷ் தனது படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதையிலும் ‘மேக்கிங்’கிலும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் சிறந்த த்ரில்லராகி இருக்கும் இந்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.














