சால்ட், ஹாரி புரூக், ரஷீத் அபாரம்: நியூஸிலாந்தை ஊதி தள்ளிய இங்கிலாந்து!

0
21

கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களைக் குவிக்க, நியூஸிலாந்து அணி 18 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்களில் படுதோல்வி கண்டது.

இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் (85 ரன்கள்), ஹாரி புரூக் (78 ரன்கள்) சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக 129 ரன்களைக் குவித்தனர். ஜாஸ் பட்லர் 4 ரன்களில் ஜேக்கப் டஃபியிடம் வெளியேறினார். ஜேக்கப் பெத்தேல் சிறிது நேரம் அதிரடி காட்டி அச்சுறுத்தி 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் வெளியேறினார். பவர் ப்ளே முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் என்று இருந்தது.

அதன் பிறகு ஃபில் சால்ட் உடன் கேப்டன் ஹாரி புரூக் இணைய அதிரடி, உரியடி உத்சவம் தொடங்கியது. 18-வது ஓவரில் இருவரையும் கைலி ஜேம்சன் வெளியேற்றும் வரை பின்னி எடுத்து விட்டனர். 129 ரன்களை 68 பந்துகளில் விளாசித் தள்ளினர்.

ஃபில் சால்ட் தன் அரைசதத்தை 33 பந்துகளில் எடுத்தார். சால்ட் மொத்தம் 56 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 85 ரன்களை எடுத்தார். கேப்டன் ஹாரி புரூக் பயங்கர ஆக்ரோஷமாக ஆடி 35 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 78 ரன்களை விளாசினார்.

இருவரையும் கைல் ஜேமிசன் 18-வது ஓவரில் வெளியேற்றினார். அதன் பிறகு சாம் கரண் இறங்கி ஜேமிசனை இடி போன்ற ஷாட் ஒன்றில் சிக்ஸ் அடிக்க 18 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்களை விளாசியது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸ் முடிவில் டாம் பாண்ட்டன் 29 ரன்கள் விளாசி இருந்தார். மேட் ஹென்றியை 19-வது ஓவரில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலாந்து ஸ்கோரை நியூஸிலாந்தின் பார்வையிலிருந்து தள்ளி எடுத்துச் சென்று விட்டார். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 236 ரன்கள் என்று இன்னிங்ஸை முடித்தது.

நியூஸிலாந்து சேஸிங்கில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் முதலில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கார்ஸ் ராபின்சனை மிட் ஆனில் கேட்ச் மூலமும் ரச்சின் ரவீந்திராவை பட்லரிடம் கேட்ச் கொடுக்க வைத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மார்க் சாப்மென் 28 ரன்கள் என்று கொஞ்சம் நிலைப்படுத்தினார். ஆனால் அவரையும் டாசன் மிட் ஆனில் கேட்ச் கொடுக்கச் செய்து வீழ்த்தினார். செய்ஃபர்ட், ரஷீத் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்தார். ஆனால் பவுண்டரியில் ஜோர்டான் காக்ஸ் அட்டகாசமான திகைப்புக் கேட்சை எடுத்தார். நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என்று ஆனது.

அபாய பின் கள வீரர் மைக்கேல் பிரேஸ்வெலை டாசன் 2 ரன்களில் 12-வது ஓவரில் வெளியேற்றினார். டேரில் மிட்செல் ஒற்றை இலக்க ஸ்கோரில் ரஷீத் பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு 17-வது ஓவரில் ரஷீத், ஜேம்ஸ் நீஷம் (17), கேப்டன் சாண்ட்னர் (36) ஆகியோரை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் என்று கதை முடிந்த நிலையில் இருந்தது. ஜேக்கப் டஃபியை மார்க் உட் வீழ்த்த நியூஸிலாந்து மொத்தமாக முடிந்தது.

ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். 23-ம் தேதி 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது, அதன் பிறகு அக்டோபர் 26-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மவுண்ட் மாங்குனியில் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here