சீக்கியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவரது ஜாமீனுக்கு எதிரான மனு பயனற்றது என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீக்கியர்கள் மீதான மற்றொரு தாக்குதல் வழக்கில் சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம்: இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சஜன் குமாருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே, மற்றொரு வழக்கில் சஜன் குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்ஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனால் அவரது ஜாமீனுக்கு எதிரான மனு பயனற்றது என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.














