ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், கத்துக்குட்டியான நமீபியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் 58 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். சர்வதேச டி 20 அரங்கில் இது அவரது முதல் சதமாக அமைந்தது. கேப்டன் சல்மான் அலி ஆகா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், ஷதப் கான் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களும் சேர்த்தனர்.
சைம் அயூப் 14, கவாஜா நஃபே 5 ரன்கள் எடுத்தனர். நமீபியா அணி தரப்பில் ஜாக் பிரஸ்ஸல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்காம்ப் 23, அலெக்சாண்டர் பஸ்சிங்-வோல்ஷெங்க் 20 ரன்கள் சேர்த்தனர்.
மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் தாரிக் 3.3 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஷதப் கான் 3 விக்கெட்களையும் சல்மான் மிர்சா, முகமது நவாஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. லீக் சுற்றின் முடிவில் அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 24-ம் தேதி இங்கிலாந்துடனும், கடைசி ஆட்டத்தில் 28-ம் தேதி இலங்கையுடனும் பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
2-வது வீரர்
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 100 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை சாஹிப்சாதா ஃபர்ஹான் பெற்றார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அகமது அகமது ஷெஹ்சாத் சதம் அடித்திருந்தார்.
பெரிய வெற்றி
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.














