ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில் சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேருக்கு ஜாமீன்

0
173

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ மற்றும் வருமான வரித்துறை ஊழியர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழி்ப்பறி செய்ததாக திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ ராஜாசிங், வருமான வரித்துறை ஊழியர்கள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு என்ற மற்றொரு சிறப்பு எஸ்ஐ-யும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதான ராஜாசிங், தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிறையில் 47 நாட்கள்: இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘இந்த வழக்கில் கடந்த 47 நாட்களாக சிறையில் இருந்து வருவதால் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டது.

அப்போது முகமது கவுஸ் தரப்பில், ‘‘வழிப்பறி செய்யப்பட்ட தொகை இன்னும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இந்த வழக்கில் கைதான மனுதாரர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழிப்பறி செய்யப்பட்ட தொகையை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here