வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் காவல் துறையின் 7 வெவ்வேறு பணிகளுக்கு ரூ.54.36 கோடி

0
239

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை காவல்துறையின் வேண்டுகோளின்படி, சிஎம்டிஏவின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்படி, உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை காவல்துறை மேம்பாட்டுக்காக தேவையான வசதிகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடசென்னை பகுதியில் 45 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவ ரூ.9.16 கோடி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் ரோந்துப் பணிக்காக 60 புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.90.6 லட்சமும், குடிசைவாழ் பகுதிகளில் இளைஞர்களின் கல்வித்திறன் மற்றும் விளையாட்டுத் திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் 10 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் அமைக்க ரூ.60 லட்சமும், போதைப் பொருட்கள் நுகர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க ரூ.2.95 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

மேலும், பணி நிமித்தமாக வந்து செல்லும் காவல்துறையினர் தங்கி செல்வதற்காக காவலர் தங்கும் விடுதிகள் அமைக்க ரூ.9.75 கோடியும், கொளத்தூர் காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.16 கோடியும், பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.15 கோடியும் என 7 காவல்துறை பயன்பாட்டுக்குரிய திட்டங்களுக்கு ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காவல்துறையினருக்கு உதவியாக போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், குற்றத்தடுப்புக்காக நவீன வசதிகள் மூலம் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், வணிக நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here