மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்பரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அடையாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனையிட்ட போக்குவரத்து போலீஸார் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தின் சாவியையும் போலீஸார் பறித்துள்ளனர்.
இதில் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், அடையாறு ஆற்றில் குதித்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் போலீஸார் சாவியை தர மறுத்ததால் ஒரு கட்டத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பதற்றமடைந்த அவரது நண்பர் சுரேஷ், ராதாகிருஷ்ணனை காப்பாற்றும்படி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டும் அவர்கள் காப்பாற்றவில்லை. 45 நிமிடங்களுக்குப் பிறகு அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராதாகிருஷ்ணனை சடலமாக மீட்டனர்.
போக்குவரத்து போலீஸாரின் அத்துமீறல் காரணமாகவே தனது மகன் ஆற்றில் குதித்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய ராதாகிருஷ்ணனின் தாயார் ரேவதி, மகனின் இழப்புக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரியும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு தனது மகனின் மரணத்துக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், மகனை பறிகொடுத்த தாயார் ரேவதிக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு கடந்தாண்டு ஜனவரியில் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இது தொடர்பாக கடந்தாண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், “அதன்படி இழப்பீடு வழங்கப்படவில்லை, சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனக்கூறி ரேவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.














