ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்; சிகிச்சை செலவையும் அரசே ஏற்கிறது: முதல்வர் அறிவிப்பு

0
126

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கோவை – திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 6-ம் தேதி சென்றபோது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டார். இதில் அந்த பெண் பலத்த காயமடைந்தார்.

இதுதொடர்பாக கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசு கடந்த 8-ம் தேதி உயிரிழந்தது. கர்ப்பிணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது: பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்படுகிறது. அவரது
உடலில் ஒவ்வொரு பிரச்சினையாக ஏற்படுவதால், சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினரின் ஆலோசனைக்கு பிறகு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும். அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here