முதியவருக்கு செல்போன் அனுப்பி ரூ.2.8 கோடி நூதன மோசடி

0
160

பெங்களூருவை சேர்ந்த முதியவருக்கு இலவசமாக செல்போன் அனுப்பி, அதன் மூலம் ரூ.2.8 கோடியை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் ஜே.எம்.ராய் (61). ஐடி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு கடந்த நவம்பரில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு பண பரிவர்த்தனையின் அடிப்படையில், இலவச கிரெடிட் கார்ட் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மீண்டும் டிசம்பரில் தொடர்பு கொண்ட அந்த நபர், ”கிரெடிட் கார்ட் இன்னும் ஆக்டிவேட் செய்யப்படவில்லை. நாங்கள் அனுப்பி வைத்த அந்த செல்போனில் சிம் கார்டு பொருத்தி சில நடைமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே, கிரெடிட் கார்டு ஆக்டிவேட் ஆகும்”என கூறியுள்ளார். இதையடுத்து ஜே.எம்.ராய் புதிய செல்போனில் சிம் கார்டை பொருத்தி, அந்த நபர் கூறியவாறு செய்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் ஜே.எம்.ராய் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.8 கோடி எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, ஆன்லைன் மோசடி மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜே.எம்.ராய் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ”டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது இலவசமாக செல்போனை அனுப்பி மோசடி செய்துள்ளனர். அவர்கள் அனுப்பிய செல்போனில் இருக்கும் செயலி மூலம் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.8 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். எனவே பொதுமக்கள் இலவசமாக செல்போன், சிம் கார்டு, புதிய செயலிகள் ஆகியவற்றை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here