மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு பங்கு: பிரக்யா தாக்குரின் வழக்கறிஞர் வாதம்

0
186

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில்இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்துக்கு (சிமி) தொடர்பிருக்கலாம் என இவ்வழக்கின் பிரதான குற்றவாளியும், பாஜக தலைவருமான பிரக்யா தாக்குரின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஏ.கே. லகோட்டி அமர்வு முன்பு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, பிரக்யா தாக்குர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே.பி. மிஸ்ரா கூறியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி அன்று வடக்கு மகாராஷ்டிராவில் மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

கற்களை வீசி தாக்குதல்: குண்டு வெடிப்பு நடந்த உடனேயே அந்த இடத்துக்கு போலீஸார் வருவதை உள்ளூர் மக்கள் தடுத்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற அவர்கள் இதுபோல் செய்திருக்கலாம்.

இதுபோன்ற சம்பவம் நடந்தால் பொதுவாக மக்கள் காவல் துறையினருக்கு உதவி செய்வர். ஆனால், இந்த வழக்கில் சம்பவம் நடந்த உடனேயே, ஏராளமான மக்கள் அங்கு சூழ்ந்து கொண்டு போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு போலீஸாரை வரவிடாமல் தடுத்து தடயங்களை அழிப்பது அப்பகுதி மக்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். குறிப்பாக, தங்கள் மக்களை (சிமி அமைப்பை சேர்ந்தவர்கள்) பாதுகாப்பதற்காக அவர்கள் இதை செய்திருக்கலாம். இவ்வாறு ஜே.பி. மிஸ்ரா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here