2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்

0
150

2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டி: 2027-ம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போட்டி நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது.

அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும்.

விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால் அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

14-வது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here