குடிநீர் பிரச்சினை 4 மாதங்களாக இருப்பதாகக் கூறி காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் தெருவில் கடந்த 4 மாதங்களாக சில பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. சில பகுதிகளில் விட்டு விட்டுத் தண்ணீர் வருகிறது. இது தொடர்பாக மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வனத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான ஆர்.வி.ரஞ்சித்குமார் அலுவலகத்துக்கு புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அமைச்சர் இல்லாததால் அலுவலகத்தில் உள்ள புகார் புத்தகத்தில் இவர்கள் பிரச்சினையை எழுதியுள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு பகுதியில் திரண்டனர்.
பலர் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
