ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ், பல்லவி சிங் தயாரித்துள்ள இந்த படம் வரும் 29-ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் கூறும்போது, “இது உணர்வு கலந்த ஆக்ஷன் த்ரில்லர் கதையுடன் உருவாகி இருக்கிறது. வடசென்னையை சேர்ந்த ஹீரோ, சிறிய பிரச்சினைக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்று கதை போகும். சிறை வாழ்க்கை பற்றிய கதை இது. இதுவரை பார்க்காத ஆர்ஜே பாலாஜியை இதில் பார்க்கலாம். அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இந்தப் படத்தில் மலையாளத்தில் வெளியான ‘சூடானி ஃபிரம் நைஜீரியா’ படத்தில் நடித்த சாமுவேல் அபியோலா ராபின்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எழுத்தாளர் ஷோபா சக்தியும் நடித்துள்ளார். 80 சதவிகித காட்சிகள் சிறைக்குள்தான் நடக்கிறது. இதற்காக கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள சிறைச்சாலையில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்” என்றார்.